search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹைட்ரோகார்பன் எரிவாயு"

    திருத்துறைப்பூண்டி அருகே ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் வயலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருத்துறைப்பூண்டி:

    காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி. நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி இருக்கிறது.

    இது பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுத்தால் காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்கள், விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள், காவிரி பாசன விவசாய சங்கத்தினர் போராடி வருகின்றன.

    திருவாரூர் மாவட்டத்தில் திருக்களார், ராயநல்லூர், நான்காம்சேத்தி, சேரன்குளம், நெம்மேலி, கருக்கங்குடி, கருணாவூர், அரிச்சபுரம், கூத்தாநல்லூர், பூதமங்கலம், மேலராதாநல்லூர் வெங்காரம்பேரையூர், கமலாபுரம், கீழப்பெத்தங்குடி, புலிவலம், வெங்கடேசபுரம் உள்ளிட்ட இடங்களில் எண்ணெய் கிணறுகள் அமைக்கப்பட உள்ளது.

    இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் ராயநல்லூரில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாயிகள், கிராம மக்கள் வயலில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

    இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம், விவசாய சங்க மாநில செயலாளர் மாசிலாமணி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர் இளைஞர் பெருமன்ற ஒன்றிய செயலாளர் சரவணன், ராயநல்லூர் கூட்டுறவு சங்க தலைவர் கருணாநிதி, மாதர் சங்க ஒன்றிய செயலாளர் குருமணி உள்பட பலர் கலந்து கொண்டு கோ‌ஷங்களை எழுப்பினர்.

    ஆர்ப்பாட்டம் முடிந்தவுடன் விவசாயிகளின் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதில் ராயநல்லூரை சேர்ந்த மணிமாறன் தலைமையில் 65 பேர் கொண்ட போராட்டக்குழு உருவாக்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டியில் உள்ள 32 ஊராட்சிகளிலும் தொடர் போராட்டம் நடத்துவது எனவும், வருகிற ஜூன் 1-ந் தேதி திருத்துறைப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது எனவும் கூட்டத்தில் ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.

    விளை நிலங்களை நாசமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்கக்கூடாது என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை தொகுதி அ.தி.மு.க.,முன்னாள் எம்.பி., ராஜா பரமசிவம் மரணமடைந்தார். ஆலங்குடியில் நடைபெற்ற அவரது இறுதி சடங்கு நிகழ்ச்சியில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ராஜா பரமசிவம் மிகவும் பின்தங்கிய குடும்பத்தில் பிறந்து அ.தி.மு.க.வில் எம்.பி.யாக, மாவட்டச் செயலாளராக சிறப்பாக பணியாற்றினார். அவரது மரணம் புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு இழப்பாக உள்ளது. 

    மேலும் ஹைட்ரோ கார்பன் போன்ற விளை நிலங்களை நாசமாக்கும், விவசாயிகளை அழிக்கும், குடிதண்ணீரை மாசுபடுத்தும் எந்த திட்டத்தையும் விவசாயிகளிடையே திணிக்கக்கூடாது. இது போன்ற நாசகார திட்டங்களை அனுமதிக்கக்கூடாது என்பதை வலியுறுத்துவோம் என்றார். தொடர்ந்து கமலின் பேச்சு குறித்தும், தமிழிசை பேச்சு குறித்தும் நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது, மதுரை இடைத்தேர்தல் தொகுதிக்கு செல்கிறேன். அங்கு இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன் என்று கூறி விட்டு புறப்பட்டு சென்றார்.
    ×